Sunday, April 11, 2010

இருள் என்னும் அளவில்லா அபாயம்




















எனைச் சுற்றி
வளர்ந்து நிற்கும் சுவர்களைக்
கரைத்தபடி, முடிவில்லாத வெளி
நோக்கி நீண்டு
கொண்டிருக்கிறது இருள்...

திரும்பிய திசையெங்கும்
மெதுவாய் முளைக்கத் தொடங்கும்
எண்ணிலடங்காத வாசல்கள்
நிலவின் முகவறையில்
கொண்டு சேர்க்கின்றன...

நீரும் குருதியும் ஓர்
நிறமாய் மாறி,
விரித்து வைத்த போர்க்களமாய்
மாறி நிற்கும் கடலினூடே
வழிந்துக் கொண்டிருக்கிறது...

தனித் தீவாய்
இருளின் விசையில்
நகரத் தொடங்கி,
அறியாத உலகங்களுக்குப்
பயணிக்கிறேன் நான்...

நான் இந்நொடி வரை
புழங்கிய உலகம், ஒலியாய் சுருங்கி
எனை நோக்கிக்
குவியத் தொடங்குகிறது!

அவ்வொலியின் வீரியத்தில்
நிலையிழந்து,
கண்களை இறுக மூடி
எனை துண்டித்துக் கொள்கிறேன்...

இருளும் நானுமாய் மட்டுமே
உறவாடும் இந்நொடியில்
நிலவின் தனிமை
எனக்குப் புரியத் தொடங்குகிறது...



















இருள்,
ஓர் இனம் புரியாத அபாயம்...
என்னால் இயன்ற வரை
கைகளை விரித்தாலும்
அளவிலடங்காத பேருலகத்தின்
மையமாய் எனை உணர வைக்கிறது...

மறுநொடி,
என் படுக்கையறையில் கூட
ஒரு விருந்தாளியாய் மட்டுமே
உணரச் செய்கிறது...

எனை மூடிய ஆடைகளைக்
காற்றில் தொலைத்து விட்டு,
இருளின் கைகளுக்குள்
புதைந்துக் கொள்கிறேன்...

ஒளியின் கோரப்பிடியில்
சிக்காமல் காத்த என்
நிர்வாணத்தொடு,
இருளின் விளிம்பில்
குழந்தையாய் நிற்கிறேன்...

என்னுள் மட்டுமே
மறைத்து வைத்த அந்த
எல்லைகளில்லா கற்பனை வாழ்க்கையை
வாழ இயலுமென
நம்ப வைத்து விடுகிறது...

உணர்வுகளின் விளிம்பில்
நிற்க வைத்து, என் புரிதலின்
உண்மைகளை நோக்கி
ஏளனமாய் சிரிக்க வைக்கிறது...

ஒளி என் கண்களைத் தேடி
கேள்விகளோடு விரைந்திடும்
வேளையிலோ,
மாயமாய் மறைந்து
கடவுள்களைப் போல், எனக்குப்
புலப்படாமல் எங்கோ நின்று
சிரித்து மகிழ்கிறது இருள்...