Friday, March 28, 2008

காகிதக்கப்பல்


















மழை நீரில் மிதந்த காகிதம் -
நான் வியந்த
முதல் அறிவியல் அதிசயம்...

அர்த்தமில்லாமல்
மடித்த காகிதத்தில்,
என் கனவுகள் ஏறிச் சென்ற
முதல் பயணம்...

தூரத்தில் தெரியும்
என் காகிதக் கண்டுபிடிப்பு,
மூழ்கிடக் கூடாதென,
கடவுளிடம் நான் செய்த
முதல் பிரார்த்தனை...

பல விதமான கப்பல்களோடு
என் நண்பர்கள் மகிழ்கையில்,
சாதரண காகிதமாக
என் கப்பல் தெரிய,
நான் வாழ்க்கையில் கண்ட
முதல் அவமானம்...

கண்களை மூடி சற்று
நினைத்துப் பார்க்கையில்
இன்னும் எத்தனை எத்தனை
முதல் அனுபவங்கள்...

வாழ்க்கைக்கான அகர வரிசையைக்
கற்றுக்கொடுத்த என் ஆசான்...

அறிவுச் சுரங்கத்தின் அடையாளமாய்,
என் இளபிராயத்துச் சாதனையாய்,
என் எளிமை இலக்கியமாய்,
நான் இரகசியமாய் ரசித்தக் காதலியாய்,
என் கற்பனையின் களஞ்சியமாய்,
இன்னும் எத்தனை எத்தனை
வடிவமாய்,
நான் அதனைக் காண்கிறேன்...

அறியாத வயதில் நான்
செய்த இந்த அழகு தான்,
காகிதத்தில் நான் வடித்த
மிக அழகிய கவிதை...

இத்தனைப் பெருமை பேசியும்,
இப்போது,
காகிதக்கப்பல் செய்ய எனக்கு
மறந்து தான் போய்விட்டது...

ஆம்,
மீண்டும்
கற்றுக் கொள்ளத் தான் வேண்டும்
ஏதேனும் ஒரு குழந்தையிடம்,
வாழ்வை ரசிக்க
எனக்கு நேரம் கிடைக்கும் போது...