Sunday, November 8, 2009

அழுத்தமான அடையாளங்கள்























எவரோ இரவலாய் கொடுத்தப் பார்வையில்
உலகைப் பார்த்துப் பழகியவன் நான்...

என் கண்களைச் சற்றே அதிகமாய் கசக்கி
என் புரிதல்களைப் பொருத்திட முயல்கிறேன்...

என் அடையாளம் தொலைவதாய்
உணர்ந்திடும் வேளையில் எல்லாம்,
புதிய புரிதல்களுக்காய் விரிகிறேன் நான்...

என் போராட்டம், சிறகுகளுக்காய் அல்ல!
நிலையான வானத்திற்காய்!!

சட்டென கரைந்து உரு தொலைக்கும் மேகமாய்
என் அடையாளம்
மாறியபடியே இருக்கிறது!

என் இருத்தலை நிலை நிறுத்துவதற்காய்
நொடிதோறும் நான்
நகர்ந்து கொண்டேயிருக்கிறேன்!!

உண்மையில்,
என்னைப் பார்த்து மட்டுமே நான் அஞ்சுகிறேன்!
காரணம்,
என் ஒவ்வொரு நொடி மாற்றத்தின் முடிவில்,
இதுவரை இருந்த நான் இல்லாமலாகிறேன்!!

நினைவுகளின் விசித்திரக் கருணையால்,
எவ்ரேனும் என் நேற்றைய
அடையாளத்தை என்னோடுப் பகிர்ந்திடும் நொடியில்,
எனக்கு நானே அந்நியமாய் தெரிகிறேன்...





















நிலையின்மையின் அபாயம் உணர்ந்தே
எனக்கான கடவுள் ஒன்றினை உருவாக்கி,
என்னோடு நடத்திச் செல்கிறேன்!

என் முயற்சிகளை
முறியடிக்கும் வண்ணமாய்,
என் கடவுளும், என் புரிதல்களுக்கு ஏற்றாற்போல்
மாறியபடியே இருக்கிறான்!!

புதிய அடையாளங்களும்
புதிய கடவுள்களும் சேர்த்தபடி,
காத்துக் கொண்டிருக்கிறேன், இவ்வுலகில்
என் இருத்தலை நிலைநிறுத்த...

முன்னொரு நாளில்,
என்னோடு விளையாடி மகிழ்ந்த
பழைய விளையாட்டுப் பொம்மையொன்று
மீண்டும் ஒரு சிறுவனுக்காய்
ஏங்கியபடியே காத்திருக்கிறது...

Wednesday, September 16, 2009

நிழல் கூத்து


















விரல் நுனி நட்சத்திரங்களை
எண் திசை எங்கிலும்
மகரந்தம் சுமக்கும் காற்றென
சிதறியபடி நகர்ந்து கொண்டிருக்கிறது
நாட்டியக்காரியின் நிழல்...

தலைவனென, தலைவியென
மரக்கிளையென, புள்ளிமானென
மாறியபடி அவள்
பதிக்கும் முத்திரையாய்
உருவகித்து அசைந்து கொண்டிருக்கிறது...

முகமறியா இருள் ஓவியமது
இரவலாய் உயிர் கொண்டு
பிரபஞ்ச பெருவளி நடனத்தின்
சிறுதுளியாய் மாறுகிறது...

கூரிய அம்பில் சிக்கிய சிறு பறவையாய்
நாட்டியக்காரி விழும் நொடியில் எல்லாம்,
வலியின் சுவடறியாத போதும்
தரையில் வீழ்ந்து அசைவற்று நிற்கிறது...

எழுவதற்காய் உத்தரவு வேண்டி,
உயிர் கொடுத்து இணைத்தவளை
ஏக்கமாய் பார்த்திடும் அதன் பாங்கு தான்,
என்னுள் எத்தனை உணர்வுகளை விளைக்கிறது!!!

நான் எழுவதை முதலாய்
உணர்ந்திடும் என் நிழல்,
ஏனோ நான் வீழ்ந்தேன் என
இறுதிவரை நம்ப மறுத்தபடியே இருக்கிறது!!!

மெழுகுவர்த்தியின் மங்கிய வெளிச்சத்தில்,
என் முன் சுவற்றில்
என்னை விட பெரிதாய் வளர்ந்து
நான் அறியாத சாகசங்களை
செய்து காட்டிய என் நிழல்,
செயவதறியாது தவிக்கையில்
உள்ளூர நான் சிரிக்கிறேன்...

நாட்டியக்காரியின் ஒப்பற்ற நடனத்தினூடே,
பறந்திட வானத்திற்காய் ஆசைப்பட்டு,
அரசனாய் அரியணைக் கனவு கண்டு,
கடவுளாய் பத்தினியின் புகழ் காத்து,
கள்வனாய் வாள் நுனியில் மடிந்து,
முடிவில்
சலனமில்லாமல் அவளோடு
தேநீர் கடை வரை
மெல்ல நகர்ந்த்து கொண்டிருக்கிறது
அவளது அழகிய நிழல்...


Monday, August 17, 2009

கறுப்புக் குடைக்காரி


















வான் கறுத்து,
குளிர் காற்று என் உடல் அதிர வீசி,
வார்த்தையில் வடிக்க இயலாத
அந்த அழகிய இருள் எங்கும் பரவி,
மழை வரும் வேளையில் எல்லாம்
தன் கறுப்புக் குடையுடன் நிற்கிறாள் அவள்...

திருத்தமாய் உடையணிந்து,
தெறிக்கும் சாரலில்
சலனமில்லாமல் நனைகிறாள்...

உலர்ந்த உதடுகளின் ஓரம்
வழியும் மெல்லிய நகையை
காற்றில் கரையவிட்டபடி,
மழையை வெறிக்கிறாள்...

அவள் பெண் என்பதால்
சற்றே அதிகமாய் திரும்பிப் பார்க்கும்
தலைகளை எல்லாம் சட்டை செய்யாமல்
எண்ணெய் பூசிய கோயில் சிலையென உயிர்க்கிறாள்...

மாலையில் சேராத உதிரிப் பூக்களென
தூவிடும் தூறலில்,
மேற்கு திசை நோக்கி நடந்து
மெல்ல மறைகிறாள்...

மழை நின்றதும்
சட்டென ஆடைகளைந்து வெட்கிச் சிரிக்கும்
சிறு குழந்தையென நின்ற
நீல வானத்தை வெறித்துப் பார்க்கிறாள்...

வெறுமையான அவள் கண்களைப்
பார்த்தபடி வானம் அங்கேயே நிற்க,
அவள் மெல்ல கடந்து போகிறாள்...















இரைச்சலுடன் மண் தொடும்
மழையின் சத்தத்தில்,
எங்கேயோ ஒரு அழுகுரல்
என் காதுகளைத் தொடாமல்
தனியாய் ஒலித்தபடி இருக்கிறது!!

தன் மனதின் புதைமணல் ஆழத்தில்
சிந்தை சிக்கித் தவித்த போதும்,
என்னோடு சாதாரணமாய் நடந்தபடி எவரோ வருகிறார்கள்!!

விளக்க முடியாத விசும்பல்கள் பல
மொழி பெயர்ந்து,
வெறித்தப் பார்வையென எனைத்
தொடர்ந்து தெருவெங்கும் வருகிறது!!

கடந்து போகும் அவசரத்தில்,
நான் உற்றுக் கவனிக்கத் தவறிய
கண்களில் எல்லாம்,
வாசகனுக்காய் ஏங்கும் காப்பியங்கள் பல
உருவாகிய வண்ணமே இருக்கின்றன!!

உரக்கக் கதறி, உருகி விழுந்து
மனவலி கரைக்க வாய்ப்பின்றி,
துயர் சுமந்து, தோள் துவண்ட
உயிர்கள் தான் எத்தனை?

சொல்லாத துயரில்
தான் எத்தனை வலி??

Sunday, April 12, 2009

முடிவில்லா கரைகள்
















நிறைவதின் இலக்கணம்
உணர்ந்திடும் கலையே நீர்...

இருள் அப்பிய ஒப்பனையில்
விழிப்பனவெலாம்
தன்னுள் புதைந்திடும் வேளையில் கூட
அயராது பெருவெளி நிரப்பிட
விழைந்திடும் நிலையே நீர்...

அருவியென அதிர்வுடன்
அழகாய் விழுந்தெழுந்து,
சிலிர்த்து நின்றிட விரும்பாது
மெல்ல நகர்ந்திடும் மனமே நீர்...

புல் நுனி ஸ்பரிசத்தில்
உடைந்திடும் பனித்துளியென
சிதறிய திசையெலாம்
ஈரம் நிரப்பிடும் குணமே நீர்...

சுதந்திரமாய் கைகளைப் பரப்பி
தன் கரை
நிர்ணயிக்கும் நீர்,
தன்னிலை உணரும் ஆற்றலதின் இருப்பிடம்!!

குருதியென என்னுள் நிரம்பி
கரை கற்ற பின்னும்,
என்னுடல் தாண்டி விண் தொட
முனைந்திடும் இயல்பதின் பிறப்பிடம்!!

உண்மையில்,
நீர் என்னைக் கடக்கையில்
தன்னைக் கடந்திடும்...
பிற உயிரனைத்தோடும்
எனை இணைத்து நடந்திடும்...
















என் கால்களை அழுந்தப் பற்றிவிட்டுப் போகும்
ஒவ்வோர் முறையும்,
என்னுள் ஓர் பகுதியைப்
பருகியபடியே இருக்கிறது கடல்.

நான் தொலைவதை உணர்ந்தபோதும்
கட்டுண்டக் காதலியாய்
கடலின் ஆக்கிரமிப்பில் நின்றிடத் துடிக்கிறேன்...

பை நிறைய எழுத்துக்கள் கொண்டு,
அலங்கார சொற்கள் சமைத்துக்
கவிதை பாட செல்கிறேன்!
கடல் நீரின் முடிவிலி புரியாத பேதையாய்,
எழுத்துக்களை எறிந்துவிட்டு
மெளனத்தால் அலட்சியப்படுத்திவிட்டுத் திரும்புகிறேன்!!

அலையும் நுரையும் கடலின் சொல்லேற்று
எனைத் தொடராமல் நின்று விட,
உலர்ந்த கரையில் நடக்கிறேன் நான்...
சற்று உற்றுப் பார்க்கையில்
என் கண்ணோடு உரசிப் போகும்
ஒவ்வோர் கண்ணிலும்
அலைகள் நெளிவதைக் கண்டு வியக்கிறேன்...

நாளடைவில்,
சிறிது சிறிதாய் தேய்ந்துப் போன
என்னை,
இழுத்துப் பார்க்கும் கடலின்
ஒவ்வோர் அலையிலும்,
சிறு துகளாய் நான் இருப்பதை அறிகிறேன்!!

என்னுள் நீர் நிறைந்து
கரை கடந்திடும் நிலை மாறி,
நான் கடலை நிறைத்து
கரை தேடத் தொடங்குகிறேன்!!

நீர் நிரம்பக் கற்றது என்னால்...
நான் நிரம்பக் கற்றது நீரால்...

நான் பருகும் ஒவ்வோர் துளி நீரிலும்,
தனைக் கடக்க முயலும்
ஒவ்வோர் உயிரும் என்னுள்
கலப்பதை உணர்ந்து சிலிர்க்கிறேன்!!

உண்மையில்,
நிறைவதின் இலக்கணம்
உணர்ந்திடும் கலையே நீர்...