Monday, August 2, 2010

தீராப் பசி






















நான் ஓயாமல்
மறைத்தே வைக்கும் என் உணர்வுகள்,
தானாகவே
ஒளிந்திடும் ஆற்றல்
பெற்று விடுகின்றன!!

என்றோ தொலைத்து விட்ட
தன் மென் நறுமணத்தைத்
தேடி ஏங்கும்
காகித மலராய்
உருமாறிக் கொண்டிருக்கிறேன்!!

இருப்பினும்,
யுகம் யுகமாய் கடந்து வந்து
நம்மோடே பயணம் செய்யும்
மனித குலத்தின்
தீராப் பசி மட்டும்
என் உதிரத்தின் துடிப்பாய்
மிச்சமிருக்கிறது!!

வற்றாத முலையொன்றின்
வெப்பத்தில் கரைந்திடவே
என் உயிர் வேட்கை
அயராது வளர்கிறது!!

எவரோ என் உலகை இரவலாய்
வாங்கிச் சென்று
அவர் கனவுகளில் வாழ்ந்துப் பார்த்து
என் ரகசியங்களை எள்ளி நகைக்கிறார்...

எவருக்கோ இரக்கப்பட்டு
அவர் தோட்டத்தில் நான்
பூக்கள் உதிர்த்திடும் போது கூட
அவர் எங்கும் விளைத்திருக்கும்
முட்களே எனக்குப் பரிசாய் கிடைக்கின்றன...

"பார்த்து விடாதே" என
எச்சரித்துவிட்டு
தன் உடைந்த பல்லை
மண்ணில் புதைத்து வைக்கும்
குழந்தையைப் போல்
நானும் புதைத்து வைக்கிறேன்,
கண்ணாடியிலிருந்து
தினம் தினம் உதிரும் என் பிம்பங்களை...

என்னையும் தின்று
பசியாறப் போகும்
இந்த மண்ணின் முகத்தில்
நீர் துளியாய் விழுகிறேன்!!

நான் விழும் இடத்தில்
விருட்சமாய் வளர்கிறது
நான் சுமையாய் விட்டுச் செல்லும்
என் தீராப் பசி...