Sunday, April 12, 2009

முடிவில்லா கரைகள்
















நிறைவதின் இலக்கணம்
உணர்ந்திடும் கலையே நீர்...

இருள் அப்பிய ஒப்பனையில்
விழிப்பனவெலாம்
தன்னுள் புதைந்திடும் வேளையில் கூட
அயராது பெருவெளி நிரப்பிட
விழைந்திடும் நிலையே நீர்...

அருவியென அதிர்வுடன்
அழகாய் விழுந்தெழுந்து,
சிலிர்த்து நின்றிட விரும்பாது
மெல்ல நகர்ந்திடும் மனமே நீர்...

புல் நுனி ஸ்பரிசத்தில்
உடைந்திடும் பனித்துளியென
சிதறிய திசையெலாம்
ஈரம் நிரப்பிடும் குணமே நீர்...

சுதந்திரமாய் கைகளைப் பரப்பி
தன் கரை
நிர்ணயிக்கும் நீர்,
தன்னிலை உணரும் ஆற்றலதின் இருப்பிடம்!!

குருதியென என்னுள் நிரம்பி
கரை கற்ற பின்னும்,
என்னுடல் தாண்டி விண் தொட
முனைந்திடும் இயல்பதின் பிறப்பிடம்!!

உண்மையில்,
நீர் என்னைக் கடக்கையில்
தன்னைக் கடந்திடும்...
பிற உயிரனைத்தோடும்
எனை இணைத்து நடந்திடும்...
















என் கால்களை அழுந்தப் பற்றிவிட்டுப் போகும்
ஒவ்வோர் முறையும்,
என்னுள் ஓர் பகுதியைப்
பருகியபடியே இருக்கிறது கடல்.

நான் தொலைவதை உணர்ந்தபோதும்
கட்டுண்டக் காதலியாய்
கடலின் ஆக்கிரமிப்பில் நின்றிடத் துடிக்கிறேன்...

பை நிறைய எழுத்துக்கள் கொண்டு,
அலங்கார சொற்கள் சமைத்துக்
கவிதை பாட செல்கிறேன்!
கடல் நீரின் முடிவிலி புரியாத பேதையாய்,
எழுத்துக்களை எறிந்துவிட்டு
மெளனத்தால் அலட்சியப்படுத்திவிட்டுத் திரும்புகிறேன்!!

அலையும் நுரையும் கடலின் சொல்லேற்று
எனைத் தொடராமல் நின்று விட,
உலர்ந்த கரையில் நடக்கிறேன் நான்...
சற்று உற்றுப் பார்க்கையில்
என் கண்ணோடு உரசிப் போகும்
ஒவ்வோர் கண்ணிலும்
அலைகள் நெளிவதைக் கண்டு வியக்கிறேன்...

நாளடைவில்,
சிறிது சிறிதாய் தேய்ந்துப் போன
என்னை,
இழுத்துப் பார்க்கும் கடலின்
ஒவ்வோர் அலையிலும்,
சிறு துகளாய் நான் இருப்பதை அறிகிறேன்!!

என்னுள் நீர் நிறைந்து
கரை கடந்திடும் நிலை மாறி,
நான் கடலை நிறைத்து
கரை தேடத் தொடங்குகிறேன்!!

நீர் நிரம்பக் கற்றது என்னால்...
நான் நிரம்பக் கற்றது நீரால்...

நான் பருகும் ஒவ்வோர் துளி நீரிலும்,
தனைக் கடக்க முயலும்
ஒவ்வோர் உயிரும் என்னுள்
கலப்பதை உணர்ந்து சிலிர்க்கிறேன்!!

உண்மையில்,
நிறைவதின் இலக்கணம்
உணர்ந்திடும் கலையே நீர்...