Tuesday, September 16, 2008

அமைதியான ஓர் மாலை




















என் நரம்புக் காம்புகளில்
மலர்ந்த மென்பூக்கள்
மெல்ல உதிர்ந்ததில்,
என் மேனி சிலிர்க்கிறது...

மூளைத் துகள்கள்
நர்த்தனம் ஆடியதில்,
என் குருதித் துளிகளில்
இன்னிசை உதிக்கிறது...

ஆனந்தப் பெருக்கில்
ஆடிய தென்றல்,
என் காதுகளை நிரப்பி
கண்களைப் பனிக்கச் செய்கிறது...

என் பார்வைக்குள்
புதைந்திருக்கும்,
துல்லியமான ஓர் பார்வையாய்
என் நினைவுகள்...

கனவு ராட்டினத்தில்
ஏறிய நினைவு,
முகமறியாத மனிதரோடுக்
கூடி விளையாடி,
தெரியாத திசையில்
நகர்ந்தபடி இருக்கிறது...

சமபரப்பில் நிரம்பிய
மண் குவியலில்,
கால் புதைய நீந்திச் செல்கிறது...

ஆங்காங்கே
இளைப்பாறி, குளிர்ந்த
நீருக்குள் முகம் புதைத்து
மீன்களிடம் இரவல் மூச்சு வாங்குகிறது...

காலம் விரித்த மடியில்
தேக்கிய அடையாளங்களைக்
கைகளில் அள்ளி
பரவசமாய் நிற்கிறது...

பொன்னிற மண்பரப்பில்
கூழாங்கற்களை விதைத்து
மாங்கனிகளை
மலரச் செய்கிறது...

குதித்தபடி ஓடுகையில்
கால் இடறி,
ஆழமானக் குழியொன்றில்
அதிரும்படியாக விழுகிறது...























பலமாய் அழுத்தி
எழ முயல்கையில்.
கூரிய கற்களில் கைகளைக்
கிழித்து சிவப்பு வண்ணம்
பூசிக் கொள்கிறது...

உச்சிமயிறை பிடித்திழுப்பது
போல் உள்ளூர வலி...
இருப்பினும் அழத் தோன்றியதாய்
தெரியவில்லை!!

கிழிந்தப் புண்களின்
வாசலில்,
கொத்தியபடி கோலம் போட
பறவைகள்
வரிசையில் வருகின்றன!!

பற்கள் கூசும்படி
எரிச்சல் பரவும் நொடியில்,
தேன் விரல்களால்
மருந்து போடும் தென்றல் வீசுகிறது...

உணர்ச்சிக் குவியலில்
குழம்பியபடி என் நினைவு நகர,
உறையும் குளிரில்
நீர் என் கால் விரல்களைத் தொட,
திடுக்கிட்டு எழுகிறேன்!!

திரும்பி நடக்கிறேன்...
நிச்சயம் வழியில் எவரேனும்
எனைக் கேட்க நேரும்,
"என்ன செய்துக் கொண்டிருந்தாய்?" என்று...
இப்போதே என்னிடம்
பதில் தயாராய்,
"அமைதியாய் கரையோரம்
அமர்ந்திருந்தேன்..."

உள்ளில் இனம் புரியாத
அதிர்வுகளைக் கடந்து வந்த
என் நினைவுகள்,
மெலிதாய் சிரித்தன
என் முகம் பார்த்து...