Sunday, October 21, 2007

என் அன்பான கிறுக்கன்














அவன்,
கண்களின் நீர் உதடுகளைத் தொடுமுன்
வெள்ளையாய் சிரிக்கத் தெரிந்தவன்...

மனவலி அதிகம் ஆதலால்,
விரல்வலி மறந்து வரைபவன்...

கிறுக்கன் என ஊர் சொன்னாலும்,
விசித்திரங்களைக் கருவில் சுமப்பவன்...

ஓவியனாய் தோற்றதை விட
மனிதனாய் அதிகமாகவே தோற்றவன்...

கிடைக்கும் ஒருவேளை உணவைப் பார்த்து
நேர்மையாய் மகிழ்ந்திடத் தெரிந்தவன்...

கோயில்கள் போவதைத் தவிர்த்து,
தெருவோரக் குப்பைகளை தரிசிப்பவன்...

பரிதாபத்தின் அபாயம் அறிந்தே,
வார்த்தைகளைக் கொஞ்சமாய் தருபவன்...

தெருவில் தான் வரையும் ஓவியங்களை,
ரசிகனாய் வியக்கத் தெரிந்தவன்...

பிழைப்பின் அவசியம் மறந்து,தன் ஒவியம்
கரைக்கும் மழையை வரவேற்பவன்...

யதார்த்தங்களைச் சட்டை செய்யாமல்,
சற்று அதிகமாய் புன்னகைப்பவன்...

என் அன்பான கிறுக்கன்,
கற்றவன் இல்லை,
ஆயினும் எனைக் கவர்ந்தவன்...

காரணம்,
அவன் நிறைவாய் வாழத் தெரிந்தவன்!
குழந்தைகளை மகிழச் செய்தவன்!
சுயநலத்தின் சுவடுகள் இல்லாதவன்!

தெளிவாய் சொன்னால்,
என்னால் விளக்க முடியாதவன்!!














தினம் செல்கிறேன் அவனைப் பார்க்க...
பலபேர் அவனைச் சுற்றி!
அவர் எறியும் ஓர் சில
சில்லறைகள் ஆங்காங்கே...

சலனமில்லாமல் தன் ஓவியத்தோடு,
என் கிறுக்கன்...

பலமுறை அவனோடு பேசத் தோன்றி,
தடுமாறி தோற்றுவிட்டேன்...

பசியை மட்டும் ஓவியத்திடம் ஒப்படைத்து,
மற்றபடி,
சுதந்திரமாய் இருப்பவன்...
கூண்டுக்கிளியாய் நான் அந்நியமாய் உணர்ந்தேன்...

உண்மையில்,
அவன் வாழ்க்கையில் நானும் வாழ்ந்தேன்...
அவன் சிறகுகளில் நானும் பறந்தேன்...
அவன் நினைவில் என்னை மறந்தேன்...
அவன் சுதந்திரத்தில் நானும் மகிழ்ந்தேன்...

அவனை நன்றியோடு
பார்த்துவிட்டுத் திரும்புகிறேன்!!

அவனோடு,
இன்றும் ஒரு வார்த்தைக் கூட
பேசாமல் திரும்புகிறேன்...

இருப்பினும் வருத்தமில்லை
காரணம்,
"கடவுள்களிடம் நான் பேசியதேயில்லை..."

Tuesday, October 16, 2007

ஒரு குழந்தையின் விசும்பல்
















மெதுவாய் நகரும் நாட்களை
எல்லாம்,
கனவுகளின் நீளத்தில்
கரைத்து விடுபவன் நான்...

பத்திரப்படுத்தும் கோபங்களை
எல்லாம்,
தாயாய் கருவுற்று
வெறுப்பாய் பெற்றெடுக்கிறாய் நீ...

சத்தமாய் குரைக்கும்
நாய் கூட,
தூங்கும் குழந்தையை
எழுப்பும் எண்ணம் கொள்வதில்லை!!!
நீ மட்டும் ஏன்??

அழுத்தமாய் எனை
அணைத்த தாயின் கதகதப்பு...
அன்பாய் எனைப்
பிடித்த தந்தையின் நெகிழ்வு...
பெயரிடும் முன்னமே, எனை
அழகாய் கிசுகிசுத்து
அழைத்த காற்றின் குரல், என
ஈர உணர்வுகளுக்காய்
எதிர்பார்த்து வாழ்பவன் நான்...

கருவறையின் ஈரப்பிடியிலேயே
கிடந்த போதும்,
என் மேல் விழுந்த
அந்த முதல் நீர்துளி,
இன்றளவும்
புதுமையாகத்தான் இருக்கிறது...

எதுவுமே அறியாத வயதில் கூட
என் தாயின் சேலையின்
ஈரவாசத்தில்
திளைத்தவன் நான்...

உணவு உண்பதற்கு முன்னமே
உணர்வுகளை உண்டவன் நான்...

ஏன் நீ ஈர அன்பினைக்
கண்டதேயில்லையா??

உன் தாய் ஊட்டிய சோற்றில்...
உன் கால்கள்
முதன்முதலாய் தரைத்தொட்ட
ஸ்பரிசத்தில்...

வெப்பத்தில் உனைக் காக்க
வெளியேறிய வியர்வையில்...


உன் முகத்தைக்
கண்ணாடியில் பார்த்த
அந்த நொடியில்...

முதலாய் பார்த்த அந்த வானத்தில்...
கிணற்று நீரில்...
ரோஜாபூவில்...
கோயில் புறாக்களில்...

நடக்கப் பயில்வதாய்
விழுந்து அழுத அந்த நிமிடத்தில்...
அதிசயமாய் வியந்த
ஜன்னல் கம்பிகளில்...

சுவற்றில் பதித்த
அழகு கிறுக்கல்களில்
மகிழ்ச்சியை எடுத்துக்காட்டிய
பட்டாம்பூச்சி சிறகுகளில்...

தந்தையின் முகத்தில் பார்த்த
அந்த பெரிய மீசையில்,
ஓரமாய் சாய்ந்திருக்கும்
கருப்புக் குடையில்... என

எதிலுமே ஈரம்
கண்டதில்லையா நீ??

ஏன் என் மேல் இத்தனை
வெறுப்பு கொள்கிறாய்?
மனத்தில்
ஈரம் நிரப்பு...

அன்பான கொசுவே,
எனைக் கடித்து, காயப்படுத்தி
என் தாயை
வருத்தப்பட வைக்காதே...
நானும்
உன்னைத் தாக்க மாட்டேன்...
உனக்கு வலி தர மாட்டேன்...
காரணம்,
உன் தாயும் வருத்தப்படுவாளே...

"தன்னைக் கடிக்கும் கொசுவை
விரட்டத்
தெரியாமல் அழும்
இந்த குழந்தையின் விசும்பல்,
அந்த கொசுவுக்குக்
கேட்டதோ இல்லையோ,
என் காதுகளில் தெளிவாய்
கேட்கிறது..."

Sunday, October 14, 2007

மகிழ்ச்சி
















மாறிக் கொண்டிருக்கும்
உலகத்தின் ஒவ்வோர் அசைவும்
ஆச்சரியத்தின் ஆணிவேர்கள்...
இந்த
மாற்றங்களின் வேகத்தில்
பழகிய காரணத்தால்,
மாறாதிருப்பதை மனிதன்
அதிகம் ரசிப்பதில்லை தான்!!

நகராத ஜன்னல் கம்பிகளைக் கூட
ரசிக்கும் பக்குவம்,
குழந்தைகள் தவிர யாருக்கும் இருப்பதில்லை!!
பொம்மைகளுக்கு சோறூட்டும்
அசட்டுதனங்களை,
அது அறிவதும் அங்ஙனம் தான்...
வளர்ந்த பிறகும்,
குழந்தையாய் மாற முனையும் மனிதரை
மூடரென கண்டெடுக்க
என் கண்களும் பழகித் தான் விட்டன...

அப்படி ஒரு மூடனைத்தான்
நானும் சந்தித்தேன்!!
நான் பழகிய தெருவில்,
பழகாத மனிதன் அவன்!!
நிழலுக்காய் என்
இல்லத்தின் பக்கமாய் நின்றான்...
சிரித்தேன் சிக்கனமாய்,
அசைவற்று நின்றான்...

ஏனோ எனக்கு,
ஆச்சரியமாய் தெரிந்தான்...
மெதுவாய் அவனருகில் சென்று
அழைத்தேன் - பதிலில்லை!!
என்னை உற்று நோக்கிவிட்டு
முகம் திருப்பினான்...

சற்று பொறுமையிழந்தேன்,
"புன்னகையில் கூட உனக்கு ஏன் சிக்கனம்?"
- உரக்கக் கேட்டேன்...

சிறிதாய் உதடுகள் நகர்த்தினான்,
"நீ மகிழ்ச்சியாக இருப்பதாகவே தெரியவில்லை,
உன்னைப் பார்த்து எப்படி சிரிப்பது?"
-தெளிவாய் பேசினான்...

புரியாமல் நான் விழிக்க, அவன் தொடர்ந்தான்,
"உலகில் உனை அதிகம்
மகிழவைப்பது எது?"


















அக்கறையில்லாமல் நானும் சொன்னேன்,
"என் குடும்பம்...நண்பர்கள்...
நல்ல உணவு...அழகான கோயில்...

எனை நிறுத்தி அவன் கேட்டான்,
"இவையேதும் இல்லையெனில் யாது செய்வாய்?"
விழித்தேன்!!

கிழிந்த பந்தொன்றை எடுத்து,
என் கைகளில் அழுத்தி சிரித்தான்...
"இதை வைத்து என்ன செய்வது?'
- திருப்பிக் கொடுத்தேன்...

அழுத்தமாய் தொடர்ந்தான்,
"குழந்தையிடம் இதைக் கொடுத்துப்பார்...
அது கற்றுக் கொடுக்கும்,
இதை வைத்து எப்படி மகிழ்வதென்று!!
அர்த்தம் பார்த்து அது மகிழ்வதில்லை...
சுற்றி நடக்கும்,
ஒவ்வோர் அசைவையும் ரசிக்கும்
பக்குவம் அல்லவா கொண்டுள்ளது...

அதனால் தான் குழந்தைக்கு,
இறப்பின் பயம் இல்லை...
எதிர்பார்ப்பின் சுமை இல்லை...
வெறுப்பின் பொருள் புரிவதில்லை...

வாழ்க்கையை முழுமையாய் வாழ்பவனுக்கு மட்டுமே,
இறப்பை அலட்சியம் செய்யும்
அதிகாரம் கிடைக்கிறது...

ஆதலால், காரணம் தேடாமல்
குழந்தையாய் வாழப் பழகு!
மகிழ்ச்சியின் இலக்கணம்,
உனக்கு நினைவு வரும்...

செருப்பு தைப்பவனின் ஊசியை
நீ ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில்
தங்க மகுடம் உனைக்
கடந்துப் போகலாம்!
இருப்பினும், மகிழ்ந்திடு நேர்மையாய்"
- நிறுத்திவிட்டு
அழகாய் சிரித்தான்...

இம்முறை அவன் புன்னகையின்
பொருள் எனக்குப் புரிந்தது...

Saturday, October 13, 2007

என் சரித்திரம்
















என் தேடல்களைத் தொகுத்தேன்,
அது வானமாய் விரிந்தது..

சிறகுகளுக்காய் தவமிருந்தேன்,
எனக்கு அனுபவம் பிறந்தது..

பறப்பதற்காய் எத்தனித்தேன்,
முகவரிகள் அறிமுகமாயின..

பயணங்கள் தொடங்கினேன்,
புன்னகைகள் அர்த்தம் பெற்றன..

காற்றோடு போராடினேன்,
வெற்றி குரல் கொடுத்தது..

கூடுகள் பல சேர்த்தேன்,
கடமைகள் எனைச் சுவைத்தன..

சிறகுகள் தளர்ந்தேன்,
யதார்த்தங்கள் தடைகளாயின..

முதுமையில் களைத்தேன்,
கனவுகள் கதைகளாயின..

மீண்டும் நிலம் திரும்பினேன்,
உண்மையைக் கருவுற்றேன்..

குழந்தையாய் மாறிச் சிரித்தேன்,
தத்துவங்கள் எனை வணங்கின..

பறவைகள் வாழும் கூடாரமானேன்,
கோபுரங்கள் பொறாமைப்பட்டன..

தாயாய் மாறிப் போனேன்,
கடவுள்கள் காணாமல் போயின..

எனை உரசிய ஒவ்வொரு கல்லும்
வைரமாய் மாறத் தொடங்கின,
நான் இறந்து போனேன்!!

இனி,
நான் மட்டும்
மீண்டும் மீண்டும் பிறப்பேன்,
பறக்கத் தொடங்கும் ஒவ்வொரு பறவையோடும்...

Friday, October 12, 2007

பயணத்தின் தொடக்கம்

"உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்" - மகாகவி பாரதியார்

வழிப்போக்கனின் அன்பு வணக்கங்கள். வெகு நாட்களாய் பிரசவித்து, இன்று பிறந்திருக்கும் அழகுக் குழந்தையாய், என் இனிய அனுபவமாய் நிற்கும் இந்த பக்கங்களோடு நீங்கள் பயணம் செய்வதில், அதிகம் மகிழ்கிறேன்.

யார் இந்த வழிப்போக்கன்?? தான் போகிற போக்கில் சிந்தனைகளைச் சிதறவிடுபவனா...அல்லது தன் பயணத்தின் சுவாரசியத்தில் சிந்திப்பதைத் தவிர்ப்பவனா...காலத்தின் புதை நிலத்தில் இலக்கணங்களைப் புதைத்து விட்டு, மிஞ்சியிருக்கும் மனிதத்தை மட்டுமே நம்பி நகரும் பயணி அவன். இமை மூடும் நேரம் தவிர்த்து, கண்களில் ஆச்சரியக் கதிரோடு உலகம் நோக்கும் குழந்தை அவன். நொடி தவறாது, வாழ்க்கையைக் காதலிக்கும் உறுதியோடு இருப்பவன். யார் அவன், எனக்கு நெருக்கமானவனா? எங்கோ பார்த்து நினைவில் நிற்பவனா? நிச்சயமாக இல்லை..என்னில் நிரம்பியது போல், உங்களுக்குள்ளும் நிரம்பியவன். என்றோ உங்கள் கனவுகளில் வந்து, யதார்த்தங்களோடு கண்ணாமூச்சி ஆடியவன்.

என் அன்பு நினைவுகளுக்கு, எழுத்துகள் என பெயரிட்டு இங்கு நிரப்புகிறேன். நம் இனிய வழிப்போக்கனோடு பயணிக்கத் தொடங்குகிறேன்.

தமிழுக்குக் கோடி நன்றிகள் !!

அன்புடன்
உங்களில் ஒருவன்