Wednesday, January 27, 2010

முகமறியாத ஒரு தேசம்
























பலமாய் வீழ்ந்திடும் இடியின் சத்தம்
என் காதுகளில்
துல்லியமாய் கேட்கிறது !
உற்று கவனித்ததில்,
அது என் இதயத்தின் துடிப்பென
மெல்ல உணர்கிறேன் !!

கடல் விரட்டியடிக்கும் காற்று போல,
என் நிலை மறந்து
ஓடிக் கொண்டிருக்கிறேன்...
களைப்பு கண் திரையினைப்
படர விடத் தொடங்குகிறது...
நான் விழுங்கும் ஒரு துளி எச்சில்கூட
உலோகம் போல்
கனமாய் இறங்குகிறது...

என் உலர்ந்த நாக்கு
முள் படுக்கையாய் மாறி
என் உதடுகளை கிழித்து
செங்குருதியில் நனைகிறது...
இருப்பினும்,
நான் அறியாத தூரத்தின்
எல்லைகள் காணும் உவப்பு மட்டுமே
என் உயிர் துடிப்பாய் மிஞ்சுகிறது...

எதற்காக ஓடுகிறேன் நான்?
நான் அறிந்த முகங்களையெல்லாம்
மறந்திட வேண்டும் எனக்கு!
எனக்குப் பழகிய குரல்களையெல்லாம்
என் காதுகளிலிருந்து
அகற்றிட வேண்டும்!!

முகமறியாத ஒரு தேசத்தில்
புதியவனாய் வாழ்ந்திட வேண்டும்!!
அதற்காய் தான் நான் ஓடுகிறேன்...
என்னைக் கடப்பதற்காய் மட்டுமே
விரைந்துக் கொண்டிருக்கிறேன்...

























என்னைச் சுற்றி ஏதுமேயில்லாத சமவெளி!
நட்சத்திரம் தொலைத்த வானம் போல்
வெறுமையான வெளி!!
துடிதுடித்து துவண்ட என் இதயம்
என் இறுதி வாக்குமூலத்தைப்
பேசிப் பழகிக் கொண்டிருக்கிறது...
இருப்பினும்,
வழி எதுவும் கண்படவில்லை...

மங்கிய என் கண்ணோரத்தில்
சட்டென ஒரு ஒளி!
வறண்ட முலைகளில்
தேன் சுரந்ததுபோல் ஓர் உணர்வு!!
நீள் வானத்தின்
கரைத்தொட்ட மிதப்பு!!

ஆம்,
புது நிலம் தொட்டு விட்டேன்...
நான் கற்பனையில் கூட
தொட்டுப் பார்க்காத தேசம்...
வெளிர் நீல நிற இலைகள்
நிரம்பிய மரங்கள்...
இசையாய் வழிந்து கொண்டிருக்கும் காற்று...
நின்றபடியே தூங்கும் மனிதர்கள்...
அத்தனையும் புதிது எனக்கு...

நான் அறவே அறிந்திராத முகங்கள்!
எதனோடும் ஒப்பிட இயலாத முகங்கள்!!
நான் கேட்ட எதனோடும்
பொருத்த முடியாத குரல்கள்!!
ஓடிய வலி மறந்து
உரக்கச் சிரிக்கிறேன்!!

நான் அறிந்திடாத முகங்களையெல்லாம்
பார்த்துச் சிரிக்கிறேன்...
நான் கண்ட தேசமெங்கிலும்
புன்னகைக்கு ஒரே அர்த்தம் மட்டுமே
இருப்பதை எண்ணி வியக்கிறேன்...
அங்கு குடிக்கும் நீர் கூட
புளிப்பாய் வேறு மாதிரி இருக்கிறது...
இருப்பினும்,
ரசிக்கிறேன் என் புதிய தேசத்தை!

அவர்களோடு குதூகலிக்கிறேன்!
நகரமெங்கும் சுற்றிக் கொண்டாடுகிறேன்!!
கண் படும் முகமறியாத
ஓர் பெண்ணோடு புணர்கிறேன்!
தேசமாளும் அரசனின்
தரிசணம் கண்டு சிலிர்க்கிறேன்!!



















ஏதென்று புரிவதற்குள்
அந்த முகங்கள் எனக்குப்
பழகத் தொடங்கி விட்டன...
அவர் குரல்களின் விசித்திரம்
சட்டென புரியத் தொடங்கி விட்டது...
வெகு காலம் நான் அறிந்த
தேசமாய் எனக்குப் படுகிறது!!
குழப்பத்தில் மயங்கி விழுகிறேன்!
கண் விழிக்கையில்
ஓர் யுகம் கடந்தது போல் இருக்கிறது!!
தெருவில் இறங்கி நடக்கையில்
திடீரென, என் பழைய இல்லம்
கண்ணில் பட திடுக்கிடுகிறேன்...
திரும்பிப் பார்க்கையில்,
மிகவும் பழகிய முகம் ஒன்று தெரிகிறது!
சிலையாய் நின்று விட்டேன்!!
காரணம்,
அது என் முகம் தான்...
என் தலை சுற்றுகிறது!
எனைச் சுற்றி அனைவரும்
என் முகத்தோடே இருக்கிறார்கள்...

கறுப்பாய், சிவப்பாய்,
பருமனாய், குள்ளனாய்,
ஆணாய், பெண்ணாய்,
குழந்தையாய், அரசனாய் என
எங்கும் என் முகம் தான்!!

ஏதென்று உணர்வதற்குள்
இடி முழக்கத்துடன் என்
இதயம் கதறுகிறது...
கடல் விரட்டியடிக்கும் காற்று போல,
மீண்டும் ஓடத் தொடங்குகிறேன்
முகமறியாத ஒரு தேசம் தேடி...

Sunday, January 24, 2010

எனைத் தொடரும் குரல்


















அறியப்பட்ட என் இறந்தகாலம்
சரித்திரம் ஆகிறது...
அறியப்படாத என் இறந்தகாலத்தின் உண்மை
எவர் கைகளுக்கும் சிக்காமல்
அமைதியின் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது...

அக்கறையாய் நான் பதிவுசெய்த
என் இறந்தகாலம்,
நான் கடந்து வந்த
வாழ்க்கையின் மையமாய் இருக்கிறது...

என் ஆழ் உறக்கத்தின்
அடி வயிற்றில்,
நெறிப்படுத்தாத என் நினைவுகள்
தலைவிரித்து சுழன்றாடுகிறது...

நான் மிருகமாய்
வாழ்ந்ததின் அடையாளமாய்
என் நாவின் ஓரத்தில்
நான் அறிந்த உதிரத்தின் ருசி
மிச்சம் நிற்கிறது...

கொடியறுத்த நொடிதனில்
தரைத்தொட்ட என் சிவந்த பாதங்கள்
இந்த நொடி வரை அளந்து வந்த நிலமனைத்தையும்
எனை அறியாமல் நினைவு கொண்டு,
என் உலக வரைபடத்தை நானே உருவாக்குகிறேன்...

சிறிது சிறிதாய்
நொடி நொடியாய் நான்
சேர்த்து வந்த என் இறந்தகாலம்
எவர் கண்களின் பார்வையாலும்
பொருள் ஏதும் பெறாமல்
என் உயிராழத்தின் துடிப்பாய் நிலைக்கிறது...
















முனைப்புடன்
நான் தடுக்க முயன்றும்,
நான் வடிக்கும் ஒவ்வோர் எழுத்தின் இடையிலும்
செருகியபடி வழிந்து விடுகிறது...

ஆற்றோரமாய் நின்றபடி
ஒய்யாரமாய் நான் வீச,
அழகாய் தாவி குதித்தெழுந்து
ஆற்றுநீரின் அறியாத ஆழத்தில்
சென்றமர்ந்த அந்த
சிறிய கல்லின் அடையாளத்தை
நான் மட்டுமே அறிவேன்...

நானே மீண்டும் கண்டுணர இயலாத
அந்த இறந்தகாலம்,
என் உணர்வுகளின் உண்மைகளோடு
புதைந்து விடுகிறது...

என்னோடு நடந்து வருபவனிடம்
பகிர்ந்திட வழி தெரியாமல்
எனக்கு மட்டுமே புரிந்த மொழியில்
நான் மட்டுமே வடித்து வைத்த என் நெறியில்
உறவாடிக் கொன்டிருக்கிறது...

தஞ்சைக் கோபுரத்தின் முன் நின்று
புகைப்படம் எடுத்துக் கொள்கையில்
என்னுள் இமயமாய்
வளர்ந்து நிற்கும் அந்த
ஆற்றங்கரை கல்
எவர் கண்களுக்கேனும் தெரிகிறதா??