Friday, November 9, 2007



















நான் ஒரு எழுத்தாளன்...
நொடிப் பொழுதில் பக்கங்கள்
நிரப்பிக் கொண்டிருக்கிறேன்...

நான் சுருட்டி எறிந்தக் காகிதத்தின்
முனையில்
தொங்கும் எழுத்தொன்று
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது
என்னை...

நானும் அதை கவனித்து விட்டேன்..
அழகாய் இருக்கிறது...
மற்ற எழுத்துக்களில் இல்லாத
ஒரு வசீகரம் அதனிடம்...
இருப்பினும்,
பார்க்காதது போல்
முகம் திருப்புகிறேன்...

நேரே பார்த்தால்,
பல கேள்விகள் கேட்கும் அது...

காரணம்,
அதனைப் படைத்து, காத்து,
அழித்த பொறுப்பு
அத்தனையும் என்னுடையது...

இலக்கணமும்
இயல்பும்
சரியாய் இருப்பினும்,
இமைப் பொழுதில்
அர்த்தம் தொலைத்தல்லவா நிற்கிறது!!

அதற்கு காரணம்
சொல்ல எனக்குத் தெரியத் தான் இல்லை...


















நிறைய எழுதுகிறேன்...
நேரம் நகர்கிறது!
வலுக்கட்டாயமாய் அதன் பக்கம்
என் கவனம்
திருப்பாமல் இருக்கிறேன்..

ஆறுதல் சொல்ல தோன்றுகிறது,
இருப்பினும் தவிர்க்கிறேன்...

பத்திரமாகப் படுக்கையறைப்
போய் சேர்கிறேன்..
இருளெங்கும் 'ங'கரத்தின் பிம்பங்கள்...
கண்களுக்குக் கட்டளையிட்டபடியே,
இரவு கடக்கிறேன்...

விடிந்ததும்,
தேடி ஓடுகிறேன் அந்த காகிதத்தை,
அதன் இறப்பிற்கு
நான் கண்டெடுத்த
காரணங்களை விளக்க..

அதிர்ச்சியாகிறேன்..
நேற்றைய குப்பைகளைக்
களைத்து விட்டிருந்தார்கள்...

அந்த காகிதத்தைக் காணாமல்,
கனமான நெஞ்சத்தோடு தொடர்கிறேன்
என் எழுத்தையும், வாழ்வையும்..

ஏனோ,
இப்போதெல்லாம்
மிக கவனத்தோடு இருக்கிறேன்,
கையெழுத்துப் போடும் போது கூட...

4 comments:

Prawintulsi said...

புலவரே...

ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்க கவிதையை வாசிக்க கிடைத்தது. வாசிக்கும் போது எனது குரலுக்கு பதிலாக ஜே.டி யின் குரலே ஒலிக்கிறது என்னுள்.... அனிச்சையாக‌

என்னை நினைவிருக்கிறதா??

Anonymous said...

Hmm..... Pala samayam Harry Atkin and Tink holloway(idea fairy - "One") kkum sorry sollittu irukaen.... ore vithiyaasam kuppai thottiyila podara pazhakkam innum varalai.

Naga Jyothi said...

hi JT,
One of my friend here has translated ur blog. its goood. :-)

just mad said...

தொடங்கியவன் தொடர்கிறான் ...
அவன் தொடர்வது தொடரும்

நிதானம் என்ற பெயரில் நிற்காமல் நின்றவன் நகர போகிறான் மீண்டும்

எத்திசை என்றுதான் தெரியவில்லை...
திசையை கடந்ததுதான் கற்பனையாயிற்ரே !!!

இனி நான் தொடர்வது நிற்காது
நின்று விடுவது தொடராது ...