Monday, August 17, 2009

கறுப்புக் குடைக்காரி


















வான் கறுத்து,
குளிர் காற்று என் உடல் அதிர வீசி,
வார்த்தையில் வடிக்க இயலாத
அந்த அழகிய இருள் எங்கும் பரவி,
மழை வரும் வேளையில் எல்லாம்
தன் கறுப்புக் குடையுடன் நிற்கிறாள் அவள்...

திருத்தமாய் உடையணிந்து,
தெறிக்கும் சாரலில்
சலனமில்லாமல் நனைகிறாள்...

உலர்ந்த உதடுகளின் ஓரம்
வழியும் மெல்லிய நகையை
காற்றில் கரையவிட்டபடி,
மழையை வெறிக்கிறாள்...

அவள் பெண் என்பதால்
சற்றே அதிகமாய் திரும்பிப் பார்க்கும்
தலைகளை எல்லாம் சட்டை செய்யாமல்
எண்ணெய் பூசிய கோயில் சிலையென உயிர்க்கிறாள்...

மாலையில் சேராத உதிரிப் பூக்களென
தூவிடும் தூறலில்,
மேற்கு திசை நோக்கி நடந்து
மெல்ல மறைகிறாள்...

மழை நின்றதும்
சட்டென ஆடைகளைந்து வெட்கிச் சிரிக்கும்
சிறு குழந்தையென நின்ற
நீல வானத்தை வெறித்துப் பார்க்கிறாள்...

வெறுமையான அவள் கண்களைப்
பார்த்தபடி வானம் அங்கேயே நிற்க,
அவள் மெல்ல கடந்து போகிறாள்...















இரைச்சலுடன் மண் தொடும்
மழையின் சத்தத்தில்,
எங்கேயோ ஒரு அழுகுரல்
என் காதுகளைத் தொடாமல்
தனியாய் ஒலித்தபடி இருக்கிறது!!

தன் மனதின் புதைமணல் ஆழத்தில்
சிந்தை சிக்கித் தவித்த போதும்,
என்னோடு சாதாரணமாய் நடந்தபடி எவரோ வருகிறார்கள்!!

விளக்க முடியாத விசும்பல்கள் பல
மொழி பெயர்ந்து,
வெறித்தப் பார்வையென எனைத்
தொடர்ந்து தெருவெங்கும் வருகிறது!!

கடந்து போகும் அவசரத்தில்,
நான் உற்றுக் கவனிக்கத் தவறிய
கண்களில் எல்லாம்,
வாசகனுக்காய் ஏங்கும் காப்பியங்கள் பல
உருவாகிய வண்ணமே இருக்கின்றன!!

உரக்கக் கதறி, உருகி விழுந்து
மனவலி கரைக்க வாய்ப்பின்றி,
துயர் சுமந்து, தோள் துவண்ட
உயிர்கள் தான் எத்தனை?

சொல்லாத துயரில்
தான் எத்தனை வலி??

3 comments:

Karthikeyan N R said...

எவருமே சொல்லாத, சொல்லத் துணியாத துயரங்களை சுட்டும் அழகிய கவிதை. அடிக்கடி நீங்கள் எழுத வேண்டும்.

Tragedy is more profound and deeper than shallow happiness, for it is mysterious and difficult to relate to.

V said...

இந்த வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது
'மாலையில் சேராத உதிரிப் பூக்களென
தூவிடும் தூறலில்,'

The last lines draw a nice parallel to the lines in a film song

'Solli Mudikkum Thuyaram Endraal Solli Iruppen
Naanaaga Ullukulle Moodi Maraiththen
Poovai Kanda Kanavaaga,'


ரொம்ப நன்றாக எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Anonymous said...

Living lives of quiet desperation....... my guide's fav line from somewhere.. athaan gnabagam varuthu..